பரிவன்புமிக்க கடவுள்
கடந்த நூற்றாண்டில் துக்காராம் என்றொரு மனிதர் இருந்தார். அவர், தான் இருந்த டேகு என்ற பகுதியில் வியாபாரம் செய்துவந்தார். மிக நேர்மையாகவும், நியாயமான முறையிலும் வியாபாரம் செய்து வந்ததால் மக்கள்கூட்டம் அவருடைய கடையிலே அலைமோதியது.
அவரிடம் இருந்த ஒரே ஒரு பலவீனம், அவர் அளவுக்கதிமான மனித நேயத்தோடும், அன்போடு இருந்ததுதான். அதனால் யாராவது அவருடைய கடைக்கு வந்து, தங்களுடைய கஷ்டத்தைச் சொல்லி அழுதால், உடனே அவர்களுக்கு அவர் தாராளமாக பணத்தைக் கொடுத்து உதவிசெய்துவிடுவார். சில நேரங்களில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகமான பொருளை எடுத்துவிட்டு, குறைவாகப் பணம் கொடுத்தால்கூட, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்.
இதனால் அவருடைய கடையில் அளவுக்கு அதிமான நட்டம் ஏற்பட்டது. எந்தளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய கடையையே இழுத்து மூடிவிடும் நிலை ஏற்பட்டது.
அந்நேரத்தில் அவருடைய மனைவி, தன்னிடம் இருந்த பணம் நகைகள் எல்லாவற்றையும் கொடுத்து வேறொரு ஊருக்குச் சென்று வியாபாரம் செய்தால் நல்ல நிலைக்கு வரலாம் என்று அறிவுறுத்த, அதன்படியே அவர் செய்தார். இதனால் அவருடைய வியாபாரம் வளர்ந்தது, அவரிடம் செல்வம் முன்பைவிட அதிகமாகப் பெருகியது.
ஒருநாள் அவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது வழியில் ஒரு அப்பாவியை சில முரடர்கள் போட்டு அடித்துக்கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்து பதறிப்போன துக்காராம் அவர்களிடம் சென்று, “எதற்காக இந்த அப்பாவியை போட்டு அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் எங்களிடம் நிறைய கடன் வாங்கியிருக்கிறான், இவன் எங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தராததனால்தான் அவனை இப்படிப் போட்டு அடிக்கின்றோம்” என்றார்கள். அப்போது துக்காராமின் உள்ளத்தில் இரக்ககுணம் துளிர்விட்டது. உடனே அவர் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து, அந்த முரடர்களிடம் கொடுத்து, அப்பாவி மனிதனைக் காப்பாற்றினார்.
மேலும் அந்த மனிதனுடைய உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், அவர் அவனை அவனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுவதற்காக கூட்டிக்கொண்டு போனார்.
அவனுடைய வீட்டிலோ வறுமை நிழலாடியது. எல்லாருமே சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆனது போன்று தெரிந்தது. உடனே அவர் தன்னிடம் இருந்த மீதப் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினார்.
தன்னுடைய கணவர் இப்படி வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பி வருவதைப் பார்த்த அவருடைய மனைவி கோபத்தின் உச்சத்திக்கே சென்றார். அடுத்த நாள் காலை துக்காராமின் மனைவி அவரை பஞ்சாயத்திற்கு கூட்டிக்கொண்டுபோய் “பிழைக்கத் தெரியாத இந்த மனிதரோடு இனிமேல் சேர்ந்துவாழ விருப்பமில்லை என்று சொல்லி, தங்கள் இருவரையும் பிரித்துவிடும்படி பஞ்சாயத்தில் கேட்டுக்கொண்டார். பஞ்சாயத்தில் அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தனர்.
இப்படி எல்லார்மீதும் அன்பும், கரிசனையும் கொண்டு வாழ்ந்ததால், பிழைக்கத் தெரியாத மனிதர் என்று சமுதாயத்தில் முத்திரை குத்தப்பட்ட துக்காராம் தான் பிற்காலத்தில் மிகப்பெரிய இசைஞானியானர். இன்றைக்கு ஏழை, எளியவர் மீது அன்புகொண்டு அவர்கள்மீது அக்கறை செலுத்தி வாழும் துக்காராமின் சீடர்கள் ஏராளம்.
நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றிவாழும் மக்கள்மீது அன்பும், பரிவும்கொண்டு வாழவேண்டும் என்பதை மேலே சொன்ன நிகழ்வானது நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக