அனைவருக்கும் ஒரே தெனாரியம்!
முகவுரை
2016 நவம்பர் மாதம் 20ம் நாள் நாம் இறையிரக்கத்தின் ஆண்டினை நிறைவு செய்தோம். “நமது மீட்பு நமது தகுதியால் அல்ல மாறாக இறைவனின் பேரிரக்கத்தால் மட்டுமே”(எபே.2:8,9) என்ற உண்மையை விளக்கும் ஒரு உவமையை நாம் இத்தருணத்தில் தியானிப்பது ஏற்ற செயலாகும்.
இந்த மதிப்பாய்வு மத்தேயு நற்செய்தி 20:1-16ல் காணப்படும் ‘திராட்சைத் தோட்ட வேலையாட்கள்’ உவமையைப்பற்றியது. இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படும் தனித்துவமான ஒன்று. இந்த உவமை இச.24:14-15 வரிகளின் கருத்தை மிகஎளிய உவமையால் இயேசு விளக்குவதாக விவிலிய விரிவுரையாளர்கள் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார்கள். இந்த உவமை இடம்பெற்றுள்ள அத்தியாயத்தின் முந்தைய அதிகாரத்தில் (மத்.19:27ல்) பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்கிறார். இதன் பதில் விளக்கமே இந்த உவமை என்ற ஒரு கருத்தும் உள்ளது. இயேசு வாழ்ந்த காலத்தில் ‘தாங்கள் மட்டுமே இறைவனின் மக்கள், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனவே விண்ணரசு தங்களுக்குமட்டும்தான் வாக்குதத்தம் செய்யப்பட்ட ஒன்று’ என்று பரிசேயர்கள் எண்ணிவந்தார்கள். பரிசேயர்களின் இந்த அகந்தையைத் தகர்க்கவும், இறையரசு பரிசேயர்களுக்கு மட்டுமல்ல புறவினத்தாருக்கும் உரியது; விண்ணரசில் யூதர்களும் புறவினத்தாரும் சமமானவர்கள் என்ற செய்தியை அறிவிக்கவுமே இயேசு இந்த உவமையை கூறினார் என்பதும் ஒரு விளக்கமாகும். மத்.8:11-12ல் இயேசு “கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசில் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக இருளில் தள்ளப்படுவர். அன்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்று மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ளார். விதைப்பவர் உவமையை (மத்.13:3-9; 18-23) தெளிவுபட விளக்கியதுபோல் இயேசு ‘திராட்சைத் தோட்ட வேலையாட்கள்’ உவமையில் பொதிந்துள்ள கருத்தை வெளிப்படையாக விளக்கிச் சொல்லவில்லை. இதனாலேயே இந்த உவமைக்கு விவிலிய ஆராய்ச்சியாளர்கள் பலதரப்பட்ட விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். இவற்றின் தொகுப்பாய்வாகவே இக்கட்டுரை அமைகிறது.
இந்த உவமையில் “நிலக்கிழார்” இறைவனைக் குறிக்கிறது; திராட்சைத் தோட்டம் இறையரசைக் குறிக்கிறது. சந்தைவெளி என்பது இந்த உலகத்தைக் குறிக்கிறது, “வேலையாட்கள்” இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட (நம்மை) மக்களைக் குறிக்கிறது; “தெனாரியம்” நித்திய விண்ணக பேரின்ப சம்பாவனையைக் குறிக்கிறது.
உவமையின் சுருக்கம்
நிலக்கிழார் ஒருவர் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அதிகாலை (ஏழு மணி என்று வைத்துக்கொள்வோம்), காலை ஒன்பது மணி, நன்பகல் பன்னிரண்டு மணி, மதியம் மூன்று மணி மற்றும் மாலை ஐந்து மணிக்கு என்று பல நேரங்களில் வேலைக்கு அமர்த்துகிறார். அதன் படி பார்த்தால் அதிகாலையில் சென்றவர்கள் ஏறக்குறைய பதினோரு மணி நேரமும்; காலை ஒன்பது மணிக்கு சென்றவர்கள் ஏறக்குறைய ஒன்பது மணி நேரமும், நன்பகல் பன்னிரண்டு மணிக்கு சென்றவர்கள் ஏறக்குறைய ஆறு மணி நேரமும், மதியம் மூன்று மணிக்கு சென்றவர்கள் ஏறக்குறைய மூன்று மணி நேரமும் மற்றும் மாலை ஐந்து மணிக்கு சென்றவர்கள் ஏறக்குறைய ஒரு மணி நேரமும் அந்த திராட்சைத் தோட்டத்தில் உழைத்துள்ளார்கள். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாட்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். ஒரு மணி நேரம் உழைத்தவர் துவங்கி பதினோரு மணிநேரம் உழைத்தவர் வரை அனைவருக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கப்பட்டது. திராட்சைத் தோட்ட உரிமையாளரின் இந்த செயல் நியாயமானதா, நியாயமற்றதா? அடிப்படையில் பலருக்கு இந்த உவமை ஆச்சரியத்தை அளிக்கலாம்! நிலக்கிழார் அநீதியாகச் செயல்பட்டார் என்றுகூட சொல்லத்தோன்றும்.
படித்தவுடன் தோன்றும் கருத்து
சில விவிலிய உரையாசிரியர்கள் இந்த உவமையை “வாழ்வு ஊதியம்” அல்லது “தேவைக்கு ஊதியம்” ("living wage") என்ற புரட்சி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என பொருள் கூறியுள்ளார்கள். உதாரணமாக “முந்தியவர்களுக்கும் பிந்தியவர்களுக்கும் தேவைகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்க முடியும்; ஆகவே தேவைக்கேற்ப கூலி என்கிற புரட்சிகரமான சிந்தனைதான் விண்ணரசுக்கு எற்ற ஒரு புதிய மதிப்பீடு” என்பதாக திருவிவிலியம்-விளக்கக் குறிப்புகளுடன்; பொது மொழிபெயர்ப்பு; நூலில் காணலாம்.
சரி, இந்த மதிப்பீட்டை சிறிது சிந்திப்போம். எனது நிறுவனத்தில் ஒருவர் பத்து ஆண்டளவாக பணிபுரிந்துவருகிறார். அவர் ரூ50,000 மாதசம்பளம் வாங்கிவருகிறார். இப்போது ஒருவரை அதே போன்ற ஒரு வேலைக்கு புதிதாக நியமிக்கிறேன்; இன்றைய விலைவாசியின் படி இருவரும் ஒரே மாதிரியான தேவையில் இருப்பார்கள். சில நேரங்களில் புதிதாக சேர்பவர் அதிக தேவையில்கூட இருக்கலாம் (?); இந்த புரட்சிகரமான சிந்தனையின் படி இவருக்கும் ரூ50,000 ஊதியம் நிர்ணயம் செய்வது நீதியான செயலா? அதனால் என்னென்ன மாதிரி பின்விளைவுகள் இருக்கும்? நான் அந்த நிறுவனத்தை தொடர்ந்து நல்லமுறையில் நடத்தமுடியுமா? ஆக இத்தகைய புரட்சிகரமான கருத்துக்காகவா இந்த உவமையை இயேசு கூறியிருப்பார்? பெரும்பாலும் இயேசு தான் கூறும் உவமை எந்த (ஆன்மீகம், சமூகம், பொருளாதாரம்) மதிப்பீட்டிற்காக என்று உவமையின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ தெளிவாகக் கூறிவிடுவார். இங்கும் அதுபோன்று நமது யூகத்திற்கோ, விளக்கத்திற்கோ இடம் வைக்காமல் துவக்கத்திலேயே தெளிவாகக் கூறிஉள்ளார். மத்.20:1 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்” என்றுதான் ஆரம்பிக்கிறார். அதாவது இந்த உவமையை நாம் ஆன்மீகத்தில் முதிர்ச்சியடையவைக்கும் ஒரு வழிகாட்டுதலாகவே கூறியுள்ளார். எனவே இந்த உவமையை பொருளாதார மதிப்பீட்டில் மட்டும் எடுத்துக்கொள்வது இந்த உவமையின் நோக்கத்தை சிதைப்பதாகும்.
இந்த உவமை விண்ணரசின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைப் பற்றியது என்றால் அதிலும் இருவகை கருத்துகளைக் காணலாம்.
கருத்து 1.
இந்த உவமையில் இயேசு தனி மனிதர்களை ஒப்பிட்டு பேசுகிறார் என்ற கோணத்தில் பார்க்காமல் அதிகாலை வேலைக்கு வந்த குழு, காலை ஒன்பது மணி, நன்பகல் பன்னிரண்டு மணி, மதியம் மூன்று மணி மற்றும் மாலை ஐந்து மணிக்கு வந்த குழுக்களை ஒப்பிட்டு பேசுவதாகக் கருதி இந்த உவமையை விளக்குவது.
ஒவ்வொரு குழுவும் ஒரு நாட்டினரையோ, அல்லது ஒரு நாட்டிலுள்ள பல இனத்தவர்களையோ குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம். இதில் சில நாடுகள் அல்லது சில இனத்தவர் மிகவும் முந்தய காலத்திலேயே இறைவார்த்தையை பெற்று அதனை ஏற்று வாழ்ந்தவர்கள்; சிலநாட்டினர் அல்லது சில இனத்தவர் பிற்காலத்தில் அல்லது அப்பொழுதுதான் இறை வார்த்தையைப் பெற்று விசுவசித்து வாழ ஆரம்பித்தவர்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் வெவ்வேறு கால கட்டங்களில் இறைவார்த்தையை பெற்று அதனை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தவர்களும் உண்டு. இத்தகைய இனத்தவர்களைத்தான் அதிகாலை (மிகவும் முந்தயைய காலத்தில் இறை வார்த்தையை பெற்றுகொண்டவர்கள்) வேலைக்கு வந்த குழு, காலை ஒன்பது மணி, நன்பகல் பன்னிரண்டு மணி, மதியம் மூன்று மணி மற்றும் மாலை ஐந்து மணிக்கு (அப்பொழுதுதான் இறை வார்த்தையைப் பெற்று விசுவசித்து வாழ ஆரம்பித்தவர்கள்) வந்த குழுவாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த உருவகத்தை மனித வரலாற்று ஆரம்பத்திலிருந்து சமீபகாலம்வரை நாம் விளக்க முடியும்.
மனித வரலாற்றில் முதன்முதலில் ஆபிரகாமையும் அவரது வழிமரபினரையும் இந்த உலகில் தனது பணிகளைச்செய்ய அழைத்தார். அதன்பின் இஸ்ரயேல் மக்கள் எகிப்த்தில் அடிமைகளாய் வாழ்ந்தபோது அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு நடத்திச்செல்ல மோசேயையும் அவரோடு இணைந்து பணியாற்றியவர்களையும் தனது பணியில் அமர்த்தினார். அந்த காலகட்டத்திலிருந்து இந்த மீட்புச்செயல் பலர் வழியாக தொடர் பணியாக செயலாக்கம் பெற்று வருகிறது. இறுதியாக இறைமகன் இயேசு மனுவுருவெடுத்து உலகிற்கு வந்தபோது மீட்பின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல மாறாக இதுவரை கடவுளைப்பற்றி,இறைவார்த்தை பற்றி அறியாதிருந்த அனைத்து நாட்டினருக்கும், இனத்தவருக்கும் கூட உரியது என்பதை அனைவரும் அறியச்செய்தார். “ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பாவிகள், வலுக்குறைந்தோர் ஆகியோர் பரிசேயர்களால் இழிவாகக் கருதப்பட்டனர், வெறுத்து ஒதுக்கப்பட்டனர். ஆனால் “இத்தகைய புறவினத்தாருக்கும் (Gentiles) அவர்களுக்கு (யூதர்களுக்கு) சமமாக விண்ணரசில் இடமளிக்கப்படும் என்பதை இயேசு மிக திட்டவட்டமாக இந்த உவமை மூலம் தெளிவுபடுத்துகிறார். இறைவார்த்தையை ஏற்று இயேசு கிறிஸ்துவை கடவுளும் மீட்பருமாக ஏற்றுக்கொண்டவர்கள் வழியாக திருச்சபையை நிறுவி அதற்கு தூய ஆவியாரின் ஆற்றலையும் வழிகாட்டுதலையும் அருளினார். ஒருகாலகாட்டத்தில் இவர்கள் தாங்கள்தான் இறைஆட்சியின் மற்றும் திருச்சபையின் உரிமையாளர்கள் என்றும் தங்களை முன்னிருத்திக்கொண்டு மற்றவர்களைவிட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு சிறப்பான மரியாதை தரப்படவேண்டும் என்ற கருத்தில் மற்றவர்களை இரண்டாம்தர இறைமக்களாக நடத்திவந்தனர். இப்படிப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்து உணர்த்தும் செய்தி “நாங்கள் தகுதியற்றவர்களாக இருந்தாலும் எங்களையும் தனது திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பினைத் தந்தாரே” என்ற மனநிலையில் வாழவேண்டும். புறவினத்தாரும், பாவிகளும், விண்ணரசைப் பெறும்போது மகிழ்ச்சியடைய வேண்டுமே அல்லாது பொறாமைப் படுவதோ, பழிப்பதோ, முறையிடுவதோ விண்ணரசுக்குறிய நல்ல பண்புகள் அல்ல என்பதே இவ்வுமையின் ஆழமான கருத்து.
கருத்து 2.
இந்த உவமையில் தனி மனிதர்களை ஒப்பிட்டு இயேசு பேசுகிறார் என்ற கோணத்திலும் பார்க்கலாம். அதிகாலை வேலைக்கு வந்த ஒருவர், காலை ஒன்பது மணி, நன்பகல் பன்னிரண்டு மணி, மதியம் மூன்று மணி மற்றும் மாலை ஐந்து மணிக்கு வந்த தனிப்பட்டவர்களை ஒப்பிட்டு பேசுவதாகக் கருதி இந்த உவமையை விளக்குவது.
இதை சரியாக புரிந்துகொள்ள விவிலியத்திலும் திருச்சபை வரலாற்றிலும் வரும் சிலரைவைத்து இந்த உவமையை விளக்கப்பார்ப்போம். திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம் கூறியதை சிறிது மாற்றி நினைத்துப் பார்ப்போம்.
“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்”. எனவே அபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கிறோம். அப்படிப்பட்ட அபிரகாமுக்கும் ஒரு தெனாரியம்.
இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களை பல இன்னல்களுக்கு மத்தியிலும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு வழிநடத்திச் சென்ற மோசேக்கும் ஒரே தெனாரியம்.
‘என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்’ (கலா.6:17)என்று கூறும் தூய பவுல் அடிகளார் எழுதியுள்ள பதிநான்கு மடல்களும் கிறிஸ்தவ வாழ்வின் அரிச்சுவடிகளாக அமைந்துள்ளன. கிறிஸ்தவ சித்ததாந்தங்கள், நெறிகள், கோட்பாடுகள் பற்றியும் அவைகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் அவசியத்தையும் தெளிவுபடுத்துகின்றன. அப்படிப்பட்ட தூய பவுல் அடிகளாருக்கும் ஒரே தெனாரியம்.
இயேசுவே குழந்தையாக அவரது கரங்களில் தவழும் பாக்கியம் பெற்றவரும் கோடி அற்புதரென்றும், புதுமைவள்ளல் என்றும் போற்றப்படும் புனித அந்தோனியாருக்கும் ஒரே தெனாரியம்.
தன் வாழ்நாள் முழுவதும் பஞ்சமாபாதகங்களைச் செய்து தான் சாவதற்கு சிலநிமிடங்களுக்குமுன் “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்ற நல்ல கள்வனுக்கு இயேசு “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று விண்ணரசை வாக்குத்தத்தம் செய்தாரே அந்த நல்ல கள்வனுக்கும் (ஒருமணி நேரமே உழைத்த வேலையாளுக்கு ஒப்பிடவும்) ஒரே தெனாரியம். அபிரகாம் தொடங்கி நல்ல கள்வன் வரைக்கும் ‘தெனாரியம்’ என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ‘விண்ணரசு’ என்ற வார்த்தையைப் போட்டுப் பாருங்கள்.
அதாவது அபிரகமுக்கும் அதே விண்ணரசு, மோசேக்கும் அதே விண்ணரசு, தூய பவுல் அடிகளாருக்கும் அதே விண்ணரசு, புனித அந்தோனியாருக்கும் அதே விண்ணரசு, நல்ல கள்வனுக்கும் அதே விண்ணரசு. ஆம் விண்ணரசில் முதல் வகுப்பு AC, இரண்டடுக்கு AC, மூன்றடுக்கு AC, படுக்கைவசதிப் பெட்டி, முன்பதிவு செய்யப்படாத பெட்டி போன்ற பாகுபாடுகள் கிடையாது. இந்த உலகில் பிறந்து மரித்து முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டு விண்ணகத்தில் உள்ள அனவருமே ஒரே நிலையிலும் ஒரே ஆற்றலோடும் உள்ளனர். அவர்களுக்குள் ஆண்டவரிடம் அதிகம் செல்வாக்கு உள்ளவர்கள், செல்வாக்கு இல்லாதவர்கள் என்ற பாகுபாடே கிடையாது.
டாரிஸ் மெக்நீலி (Beyond Today என்னும் விவிலிய விரிவுரை தொடரில்) இவ்வாறு எழுதுகிறார். “எனது பதினெட்டு வயதில் என் அப்பா எங்கள் குடும்ப நிறுவனத்தை விற்றுவிட்டு ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டார். எனது கல்லூரி படிப்பைத் தொடர நானும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு பெரிய கட்டுமான நிறுவனம் தினக்கூலிக்கு ஆள் எடுப்பர்கள். அந்த நிறுவனத்தின் ஒரு பெரிய முகப்பு கூடத்தில் (கூலியாட்கள் மந்தையை பார்த்திருப்பீர்கள்) நிறைய ஆட்கள் காலையிலேயே வந்து கூடிவிடுவார்கள். முதலாளி வந்து தேவைபடும் ஆட்களை தெரிவுசெய்து அவர்களின் வேலைக்கேற்ப கூலியை நிர்ணயம் செய்து வேலைக்கு அனுப்பிவிடுவார். முதல் நாள் நானும் காத்திருந்தேன்; எவ்வளவோ கெஞ்சியும் அவர் வேலை கொடுக்கவில்லை; மறுநாளும் அதிகாலையிலேயே வந்து காத்திருந்தேன்; அன்றும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அந்த இரண்டு நாட்களின் அனுபவத்தில் வாழ்க்கைப் பாடங்களில் ஒன்றை கற்றேன். “எனது திறமையோ, சக்தியோ ஒருபொருட்டல்ல – வேலை கிடைப்பதும் கூலியின் அளவை நிர்ணயிப்பதும் ஒரு எசமானரின் தனிப்பட்ட விருப்பத்தின்படிதான்”. திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையை நான் வாசிக்கும்போதெல்லாம் அந்த இரண்டு நாட்கள்தான் என் நினைவிற்கு வரும்”.
எனவே திரட்சைத் தோட்ட உரிமையாளரின் செயலை ஒரு பேரிரக்கத்தின் செயலாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அதை அநீதியாக அர்த்தம்கொள்ளக் கூடாது. ஆம் இறைவன் தான் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின்மேல் அளவற்ற நிபந்தனையற்ற அன்பையும் கருணையையும் தயவையும் (benevolence) பொழிபவர். விப.33:19ல் “யார்யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்” என்கிறார் ஆண்டவர். ஒரே வரியில் புரிந்துகொள்ளவேண்டுமானால் “இந்த உவமை இறைவனின் அளப்பரிய இரக்கத்தை வலியுறுத்துகிறதே தவிர இறையரசிற்கு நாம் எவ்வளவு தகுதிபெற்றுள்ளோம் என்பதை அல்ல. இதையே தூய பவுல் அடிகளார் உரோ.9:16ல் ‘ஆகவே, மனிதர் விரும்புவதாலோ உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது’. இந்த இறைவனின் நிபந்தனையற்ற, எல்லையற்ற பரிவன்பை ஊதாரி மைந்தன் உவமையிலும் இயேசு உறுதிபட உணர்த்தியுள்ளார். ‘ஊதாரி மைந்தன்’ உவமையிலும் இந்த உவமையின் பிரதிபலிப்பைக் காணலாம். தந்தையின் மூத்தமகனில் அதிகாலையில் வந்தவர்களின் மனநிலையையும் இளையமகன் திருந்தி திரும்பி வந்தபோது இருந்த தந்தையின் மனநிலையை இறைவனின் மனநிலைக்கும் உருவகப்படுத்தலாம்.
சிந்தனைத் துளிகள்
1. ‘திராட்ச்சைத் தோட்ட உரிமையாளர் ஒரு நாளில் ஏன் பலமுறை வேலையாட்களைத் தேடிச்செல்கிறார்?
ஒருநாள் என்பது இந்த உலகத்தின் மொத்த ஆண்டுகள் அல்லது ஒரு மனிதன் என்ற அடிப்படையில் பார்த்தால் அவன் வாழ்நாள். திராட்சைத் தோட்டம் (இறையரசு) பரந்து விரிந்த ஒன்று. அது ஒவ்வொரு நாளும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது. எனவே வேலையாட்களின் தேவையும் கூடிக்கொண்டே இருக்கும். எனவேதான் இறைவனும் இந்த உலகத்தின் இறுதிநாள் வரைக்கும் ‘தான் எல்லாம்வல்ல இறைவனின் மகன் என்பதையும்கூட பொருட்படுத்தாது’ தனது இறையாட்சிக்கு மனிதரைத் தேடிச்சென்றுகொண்டே இருக்கிறார். காரணம் அனைத்து மக்களிடமும் இறையாட்சிபற்றிய நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும், அனைத்து மக்களும் இறையாட்சிக்குள் வரவேண்டுமென்பதற்காகவே.
2. வேலையாட்கள் நாளின் இறுதியில்தான் ஊதியத்தைப் பெற்றார்கள்.
சிலர் வேலை (இறையாட்சிப் பணி) பிடிக்காமல் பாதியிலேயே தோட்டத்திலிருந்து வெளியேறியிருக்கலாம் (இவர்களுக்கு ஒரு தெனாரியம் அல்லது விண்ணரசு என்றஅந்த ஊதியம் இல்லை). இது “நாம் இறுதிவரை மனம் தளராமல் உழைக்கவேண்டும்” என்பதை குறிக்கிறது
நம்மைப் பொறுத்தவரை
v முதலில் இறைஆட்சிக்குள் (திராட்சைத் தோட்டத்திற்குள்) வரவும் அதில் உழைக்கவும் விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
v “லூக்.19:44கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்று நம்மையும் பார்த்து சொல்லாதவாறு கடவுள் (திராட்சைத் தோட்ட உரிமையாளர்) நம்மை கண்டு அழைக்கும்வண்ணம் நாம் திறந்தமனதோடு (சந்தைவெளியில்) அவருக்காகக் காத்து இருக்கவேண்டும்.
v அவரது தோட்டத்தில் (இறையரசில்) கடவுள் கொடுக்கும் பணி எதுவானாலும் நியாயமாக உழைக்கவேண்டும்.
v அந்த பணி நிறைவடையும் வரை மனம் தளராது உழைக்கவேண்டும் – உழைக்கும் காலம் எவ்வளவு என்பது ஒரு பொருட்டே அல்ல.
v இறைவன் அளிக்கும் வாய்ப்பு ஒருவருக்கு எந்த நேரத்திலும் வரலாம். நாம் நம்பிக்கையோடு காத்திருக்கவேண்டும்; வாய்ப்பு வரும்போது அதை ஏற்று அவரது விண்ணக பேரின்பப் பரிசுக்காக (ஊதியத்திற்காக) உண்மையாய் உழைக்க வேண்டும்.
v அதிகாலையில் வந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாரைப் பற்றியும் குறை கூறவில்லை, பொறாமைப்படவும் இல்லை. அதேபோல் கிறிஸ்தவர்களாகிய நாம் பிறர் குறிப்பாக தீயவர்கள், பாவிகள் என நாம் கருதுபவர்கள் கிறிஸ்துவால் மீட்கப்பட்டு இறையாட்சியில் நுழையும்போது மகிழ்ச்சி கொள்ளவேண்டும்.
v இறையாட்சியில் அல்லது இறையாட்சிக்காக உழைக்க அழைப்புக் கிடைப்பதே ஒரு உயர்ந்த உன்னதமான பேறு. அந்த அழைப்பு இறைவனிடமிருந்து எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. நாம் மனம் தளராமல் அவருக்காக காத்திருந்தால் நிச்சயம் அழைப்பார்; அவரது அரசில் பணியாற்றியபின் அவர் வாக்களித்த விண்ணரசு என்ற ஒரு தெனாரியத்தை பெற்றுக்கொள்வோம்.
v நம்மில் எழும் அல்லது எழவேண்டிய ஒருகேள்வி “இன்றைய சூழலில் ஐந்து மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள் (eleventh-hour workers) யாரைக் குறிக்கிறது?” இதற்கு ஓரிரு பதில்கள் இருப்பினும் (உதாரணமாக விவிலியத்தில் நல்ல கள்வன் ; மரணப் படுக்கையில் மனம் மாறி இறைவனை ஏற்றுக்கொண்டவர்கள் ) சந்தேகமே வேண்டாம் ‘நாம்தான் அவர்கள்’. இந்த உருவகம் நமக்கு அளிக்கும் ஆறுதலான நற்செய்தி என்ன தெரியுமா? “நாமும் விண்ணக விருந்துக்கு இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மதிப்புமிக்க விருந்தினர்கள்” என்பதே. இந்த நம்பிக்கையை அளிக்கும் செய்தியுடன் ஒரு எச்சரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாட்சியில் பங்கேற்பது நமது தகுதியால் அல்ல கடவுளின் எல்லையற்ற இரக்கத்தை முன்னிட்டே (God rewards by His grace, not by our worthiness.) என்பதுதான் அந்த எச்சரிக்கை.
செபம்
இறைவா! உமது திராட்சைத் தோட்டத்தில் எந்த பணியானாலும் மனமுவந்து செய்யத் தயாராக இருக்கிறேன். அந்த பணியில் இறுதிவரை நிலைத்திருந்து விண்ணகத்தில் அன்னை மரியாளோடும், அனைத்து புனிதரோடும் சகல விண்ணக தூதர்களோடும் சேர்ந்து நித்தியத்திற்கும் உம்மை போற்றி துதிக்கும் அந்த ஒரு தெனாரியத்தை எனது தகுதியின் பொருட்டு அல்ல மாறாக உமது பேரிரக்கத்தை முன்னிட்டு எனக்கு தந்தருளும் ஆமென்.
unknown Author
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக