ஒளியின் மக்களின்முன்மதி

 

ஒளியின் மக்களின்முன்மதி

இயேசு தான் வாழ்ந்த மூன்றாண்டு பகிரங்க வாழ்வில் பல ஆன்மீக, சமூக,  பொருளாதர விழுமியங்களை சராசரி மக்களும் புரிந்துகொள்ளும்வண்ணமாக பல எளிய உவமைகளைக்கொண்டு விளக்கியிருக்கிறார். அத்தகைய உவமைகளில் ஆன்மீகம் சார்ந்த ஒரு உவமைதான் நாம் லூக்16:1-9ல் வாசிக்கும் “முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்” என்ற உவமை.  இப்போது நாம் விவிலிய பகுதிக்கு வருவோம்.

விவிலிய பகுதி: 1இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்’ என்று துவங்கும் இந்த உவமை நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.  பலமுறை திருப்பலியில் வாசிக்கக் கேட்டிருக்கிறோம். இருப்பினும் நமது விண்ணக பயணத்திற்கு எவ்வளவு ஆழமான தொடர்புடைய அல்லது அவசியமான பாடம் என்பதை நாம் அவ்வளவாக உணர்ந்ததில்லை.   இந்த உவமையை நாம் புரிந்துகொண்டு நமது வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்ள, நற்செய்தியில் காணப்படும்  வீட்டுப் பொறுப்பாளர்’  நான்தான் என எண்ணிக்கொள்ளுங்கள். இந்த வீட்டுப் பொறுப்பாளர் வாழ்வில் இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது வீட்டுத் தலைவரிடம் பணிபுரியும் பகுதி, இரண்டாவது வீட்டுத் தலைவர் வீட்டில் பணி நீங்கியபின் வாழும் பகுதி.   அதேபோல் நம் ஒவ்வொறுவரின் வாழ்விலும் இரு நிலைகள் உள்ளன: முதலாவது இந்த உலகில் வாழும் வாழ்வு. இது வீட்டுத் தலைவரிடம் பணிபுரியும் பகுதியைக் குறிக்கிறது,  இரண்டாவது இறந்தபின் வான் வீட்டிற்குச் சென்று வாழும் மறு வாழ்வு.   இது வீட்டுத் தலைவர் பணியிலிருந்து நீங்கியபின்  வீட்டுப் பொறுப்பாளர் வாழும் பகுதியைக் குறிக்கிறது.

விவிலிய பகுதி: “3அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.

பணியிலிருந்து நீக்கப்பட்டபின்  அவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்  இரண்டு வகை வாழ்வை சிந்தித்துப் பார்க்கிறான்: ஒன்று கஷ்டப்படவேண்டிய வாழ்க்கை மற்றொன்று பிறர் அவனை ஏற்றுகொண்டு நிம்மதியாக வாழும் வாழ்க்கை. இதில் அவன் தெரிவு செய்தது நிம்மதியாக வாழும் வாழ்க்கை.  இந்த உலக வாழ்வுக்குப்பின் நம்முன்னும் இருப்பது இருவகை மறுவாழ்வு; ஒன்று விண்ணகத்தில் நித்தியத்திற்கும் இறைவனோடு பேரின்பத்தில் வாழ்வது மற்றொன்று நித்தியத்திற்கும் இறைவனைப் பிரிந்து வாழும் நரக வேதனை. இதில் இறைவனோடு நித்திய பேரின்பத்தைத் தெரிவு செய்யும் ஒருவர் தன் வாழ்வில்  முன்மதியோடு என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த உவமை.

விவிலிய பகுதி: 4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். 6அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். 7பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

வீட்டுப் பொறுப்பிலிருந்து அவனை நீக்கிவிடும் போது பிறர் தன்னை தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி செய்யவேண்டிய காரியத்தை முன்மதியோடு அவன் பணியில் இருந்தபோதே செய்துமுடித்துவிட்டான். அதேபோல் நான் இறந்தபின் இறைவன் என்னை தனது வான் வீட்டில் ஏற்றுக்கொள்ளும்படி நான் செய்யவேண்டிய காரியங்களை நானும் முன்மதியோடு  இந்த உலத்தில் வாழும்போதே செய்துமுடிக்க வேண்டும்.  நான் செய்யவேண்டிய அந்த காரியங்கள் என்ன என்ன என்பதும் எனக்குத்தெரியும். ஆம்

v என் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனதோடும் இறைவனை அன்பு செய்வேன் [மத். 22:37; மாற். 12:29-30;  லூக். 10:27]

v என்மீது நான் அன்பு செலுத்துவதுபோல் எனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வேன். 

v பசித்திருப்போருக்கு உணவளிப்பேன்; தாகமாக இருப்போருக்குப் பருகக் கொடுப்பேன்; அன்னியரை ஆதரவற்றவர்களை என் வீட்டில் ஏற்றுக்கொள்வேன்; ஆடையின்றி இருப்போரை உடுத்துவேன்; பராமரிக்க யாரும் இல்லாத நோயாளிகளை கவனித்துக்கொள்வேன்; சிறையில் வாடுவோரைத் தேடிச் சென்று ஆறுதல் கூறுவேன். “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு கூறியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் [மத்.25:31-46].  இத்தகைய காரியங்களை நற்செய்தி முழுவதும் காணலாம்;  உதாரணத்திற்கு “ஊதரிமைந்தன்”  “நல்ல சமாரியன்”. . . . .

விவிலிய பகுதி: 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்.

நாமும் முன்மதியுள்ளவர்களாய் இவ்வுலகில் வாழும்போதே மேற்கூறியவற்றை செய்யும்போது இயேசுவும்(மத்25:34) ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி நம்மை பாராட்டுவார். 

விவிலிய பகுதி:  ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்

வீட்டுப் பொறுப்பாளர் இருளின் (இவ்வுலகின்) மக்கள்.  எனவே அவன் முன்மதி இருளின் முன்மதியாகவும் அவன் செய்த செயல்கள் இருளின் செயல்களாகவும் இருந்தன.  நாமோ ஒளியின் மக்கள், நமது முன்மதி ஒளியின் முன்மதியாகவும் நமது செயல்கள் ஒளியின் செயல்களாகவும் இருத்தல் வேண்டும்

. 9“ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

அதேபோல் நாமும் நம்வாழ்வில் நம்மிடம் இருப்பவற்றைக்கொண்டு பிறருக்கு நன்மைகளைச் செய்து  இறவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட செலவங்களை பிறரோடு பகிர்ந்துகொண்டு இறைவன் நம்மை நிலையான பேரின்ப வீட்டில் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி வாழ்வோம்.  இக்கருத்தை விவிலியத்தின் பல இடங்களில் காணமுடியும்.

v மத்.6:19-20 மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.  ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. 

v லூக்.12:33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. 

v 1யோவான் 3:17 உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? 

v 1திமோ6:18-19அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

நாம் முன்மதி உடையவர்களா? அந்த முன்மதி ஒளியின் முன்மதியா? நாம் முன்மதியுடன் செய்யும் செயல்கள் ஒளியின் செயல்களா? பதில் எதிர்மறையாக இருந்தால் காலம் தாழ்த்த வேண்டாம்.  இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Fifty steps to a happy marriage life

 50 steps to a happy marriage life  Start each day with a kiss. *    Wear your wedding ring at all times. *    Date once a week. *    ...